வெள்ளி, 3 டிசம்பர், 2010

தலைமுடி

தலைமுடி
முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
baby bath
தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.
தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.
Hair care
தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.
Hair treatment
வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.
பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.
பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.
Hair combing
முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.
அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.
சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.
hair care kit
பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.
நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

முகம் கண்கள்


முகம்
நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.


கண்கள்
Eyes "கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
Eyesபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
Eyesகண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

உதடு மற்றும் வாய்

உதடு மற்றும் வாய்
இந்த வாரம் உதடுகள், பற்களின் பராமரிப்பையும், சிறப்பாக அவற்றை அழகுப் படுத்திக் கொள்வதையும் பார்ப்போம். உதடுகளை இதழ்கள்னு பூவோட சம்பந்தப்படுத்தி சொல்லும்போதே அது எவ்வளவு மென்மையான பகுதின்னு நமக்கு தெரியும். நம்ம உடம்பில் வேர்க்காத பகுதி உதடுகள்தான். உதடுகளுக்கு என்ன பெரிய கவனிப்பு தேவை, சும்மா வெடிப்புக்கு வேசலின் தடவினா போதாதான்னு கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணம். தனித்தனியா முகத்தில் ஒவ்வொரு பார்ட்ஸையும் கவனிக்க நம்மால முடியுமான்னு தோணும். தனித்தனியா கவனிக்க தேவையே இல்லை. நம்ம தினசரி வேலைகளிலேயே உதடுகளை பராமரிச்சுக்கறதுக்கான வழிகளும் இருக்கு.


காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.
Lipsஉதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.
இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.
ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக் காட்டிலும் ( தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.
வெளியில் அழகு படுத்திக் கொள்வதைக் காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருட்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆபிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதனைக் கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.
Lipsஇப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.
உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை. லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.
Lipsticksலிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய" இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்கிற்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால் லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.

மூக்கு மற்றும் காது

மூக்கு மற்றும் காது
இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.
Noseகிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.
மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.
நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.
Noseரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.
மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.
மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.
இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.
அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.
Earநம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.
அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.
காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

கைகளை பராமரிப்பது எப்படி?

கைகளை பராமரிப்பது எப்படி? Manicureஇந்த வாரம் கைகளை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. இதற்கென்று தனியாக இப்போது சலோன்கள் வந்துவிட்டாலும் அதற்கென்று செலவழிக்க மனமோ, பொறுமையோ பலருக்கு இருப்பதும் இல்லை. திடீரென்று ஒரு நாள் பார்க்கும்போதுதான் அய்யோ ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று தோன்றும். பிறகு அந்த லோஷன், இந்த ஸ்க்ரப் என்று மாற்றி மாற்றி ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் உபயோகித்து விட்டு மறுபடியும் பழைய கதையையே தொடருவார்கள். இந்த விஷயத்தில் சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் இந்த நேரமின்மை பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் கைகளுக்கு வருவோம். திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இன்னும் பொருந்தும்.
கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள். எப்போதுமே கிளவுஸ் பிடிக்காது என்பவர்கள் பாமோலிவ் டிஷ் க்ளீனிங் லிக்விட்டில் 'Tough on Grease , Soft on Hands" என்று குறிப்பிட்டிருக்கும் வெரைட்டி வாங்கி உபயோகப்படுத்தலாம். மற்ற பிராண்டுகளில் இந்த தன்மையுள்ள லிக்விட் கிடைத்தாலும் வாங்கி உபயோகப்படுத்தலாம். இதுதவிர கைகளில் தண்ணீர் படாத வண்ணம் தடுக்கும், ஹெவி ட்யூட்டி செய்பவர்களுக்கென்ற உள்ள சிலிக்கான் டைப் லோஷன்களை போட்டுக் கொண்டும் பாத்திரம் கழுவலாம். Avon Brand ல் இந்த வகை ஹேண்ட் க்ரீம் உள்ளது.
எப்போதும் கிச்சன் அருகே ஒரு சின்ன சைஸ் ஹேண்ட் லோஷன்(Vaseline Brand நன்றாக இருக்கும்) இருப்பது அவசியம். பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். இதை தினசரி ரொட்டீனாக வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள்.
Manicureநகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம். மோதிரம் அணிபவராக இருந்தால் இரவு அதனை அகற்றிய (திருமண மோதிரம் அணிபவராக இருந்தால் அது தவிர மற்ற மோதிரங்களையாவது கழட்டிவிடுங்கள்) பிறகே தூங்க செல்லுங்கள். இல்லாவிட்டால் மோதிரம் போட்ட இடம் ஒரு நிறமாகவும், அங்கே ஸ்கின் இறுகி கடினமாகவும் ஆகிவிடும். கைக்கு தேவையான அத்தனை காஸ்மெட்டிக் ரேஞ்சும் Avon, Palmer, Vaseline போன்ற பிராண்டுகளில் கிடைக்கிறது.
கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். மெஹந்தி போடுபவராக இருந்தால் உடைகளுக்கு பொருத்தமான மெஹந்தி டைப்பை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக வெஸ்டர்ன் உடைகளுக்கு பிளாக்/ அரேபிக் மெஹந்தி டிசைன்கள் நன்றாக பொருந்தும். கைகளில் மெஹந்தி எப்போதுமே சரியாக பிடிப்பதில்லை என்று சொல்லுபவர்கள் மெஹந்தியை போட்டு காய்ந்த பிறகு ரிமூவ் செய்ய தண்ணீருக்கு பதில் எண்ணெய் உபயோகித்து, பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4,5 கிராம்பு போட்டு அதில் வரும் புகையை கை முழுக்க படுமாறு வையுங்கள். மருதாணி நன்கு பிடித்துக் கொள்ளும். மருதாணி கைகளில் காயும்போதே, ஒரு சின்ன கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றில் சக்கரையை கலந்து திக்காக வைத்துக் கொண்டு அதனை பஞ்சில் தொட்டு,கைகளில் இருக்கும் மருதாணியில் தடவுங்கள். இதுவும் மருதாணி கலர் நன்கு வர உதவும். கவரிங் அல்லது பேன்சி கடைகளில் இருக்கும் வளையல்களை அணிபவராக இருந்தால் அது உங்கள் கைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்று டெஸ்ட் செய்து அணியுங்கள். ஏனென்றால அலர்ஜி ஏற்பட்டு தோல் நிறம் பாதிக்கப்பட்டால் மீண்டும் பழைய நிறம் வருவது கடினம்.
இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்
ஹேண்ட் லோஷன்
ஸ்க்ரப்பர்
சின்ன சைஸ் பேபி பிரஷ்
ஒரு கப்பில் தண்ணீர்
சிறிது லிக்விட் சோப்
முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம். சலோனிலேயே காலுக்கு மட்டும்தான் Corn Blade உபயோகிப்பார்கள். கைகளுக்கு என்றால் உபயோகிக்க மாட்டார்கள். தெரியாமல் உபயோகித்து கையில் வெட்டிக் கொள்ளாதீர்கள்.
Manicure kitCorn Blade என்பது காய்கறி தோல் சீவுவது போல் கால்களில் சேர்ந்திருக்கும் மிக கடினமான தோல்களை நீக்கப் பயன்படுவது. பார்க்கவும் சின்ன சைசில் தோல் சீவி போன்றே இருக்கும். உபயோகிக்க எளிது. முதலில் கால்களுக்கு உபயோகித்துப் பார்த்து பிறகு, கைகளுக்கு ஒரு முறை மட்டும் செய்யலாம். ஏனென்றால் கால்களில் ஷூ, செருப்பு அணிவதாலும், நமது வெயிட்டை தாங்குவதாலும் உள் பாதங்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேவைப்படும் Corn Blade, கைகளுக்கு ஒரு முறை உபயோகித்தாலே போதும். பிறகு நமது ஒழுங்கான கவனிப்பிலேயே கடினமான தோல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இப்போது நெயில் கட்டர் கொண்டு நகங்களை ஷேப் செய்யுங்கள். முனையில் அரைவட்ட வடிவில் இருக்கும் நகங்கள் எப்போதும் உள்ள ட்ரெண்ட் என்றாலும் மிக மாடர்ன் லுக் ட்ரெண்ட் இப்போது நேர்வடிவ முனையுள்ள நகங்கள்தான். இதற்கு சதுர பக்கங்களைப் போன்று மேல்புறம் ஷேப் செய்ய வேண்டும். சைடுகளில் நகத்தை ட்ரிம் செய்தாலும் மேலே குறுகலாக வெட்டிவிடக்கூடாது. நகங்களை இப்படி வெட்டிய பிறகு ஃபைல் கொண்டு ( பொதுவாக நக வெட்டியிலேயே கோடு கோடாக பின் பக்கம் அட்டாச் செய்திருக்கும்) வெட்டிய இடங்களை தேய்த்து விடுங்கள். இதனை குழந்தைகளுக்கு நகம் வெட்டும்போதும் செய்யலாம். அப்போதுதான் கீறாமல் இருக்கும். நமக்கும் நகங்கள் உடையில் மாட்டி இழுபடாது.
மெனிக்யூர் கிட்டில் உள்ள சிறிய கத்திரிக் கோல் அல்லது பேபி நெயில் கட்டர் கொண்டு விரல் முனையில் நகங்களுக்கு பக்கவாட்டில் உள்ள எக்ஸ்ட்ரா கடின தோல்களை வெட்டி நீக்குங்கள். பழக்கம் இருந்தால் நகத்தின் (நகம் ஆரம்பிக்கும் விரல் பகுதியில், வளர்ந்த நகப் பக்கத்தின் அடிப்பகுதி அல்ல) அடிப்பகுதியில் இருக்கும் தோலையும் லேசாக முனைகளை கட் செய்துவிடலாம். இதனை பார்லரைவிட நாமே செய்து கொள்ளும்போது நமக்கு வலிக்காதவாறு செய்து கொள்ளலாம். க்யூட்டிக்கள் புஷ்ஷர் என்று மெனிக்யூர் கிட்டில் இருக்கும். அது இல்லாதவர்கள் ஸ்டெரிலைஸ் செய்த பிளக்கரின் பின்புறம் அல்லது ஸ்பூனை உபயோகித்து நகத்தில் அடிப்பகுதியில் உள்ள சதையை கீழ் நோக்கி தள்ளிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த இடங்களில் இருக்கும் அழுக்கும் நீங்கும். நகமும் நீண்டதாக தோற்றமளிக்கும். பிறகு கையில் லோஷனை தடவி நன்றாக விரல்களை அழுத்தி மசாஜ் செய்யுங்கள். பிறகு கையினை கழுவி துடையுங்கள்.
இப்போது நெயில் பாலீஷ் போடும் முறையினைப் பார்ப்போம். இதில் என்ன பெரிய விஷயம், நெயில் பாலீஷ் இரண்டு கோட்டிங் கொடுத்தால் விஷயம் முடிஞ்சது என்று சொல்லுபவர்கள் இந்த முறையில் ஒரு முறை பாலீஷ் போட்டால் நிச்சயம் வித்தியாசத்தை உணருவார்கள். நெய்ல் பாலீஷ் போடும் முன்பு முதலில் நகத்திற்கு (Base Coat) பேஸ் கோட் அப்ளை செய்ய வேண்டும். இது நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். ஆனால் நிறமற்றதாக இருக்கும். பேஸ் கோட்டிங் போடுவது, நெயில் பாலீஷ் நன்றாக நம் கையில் பிடித்துக் கொள்ளவும், நகத்திற்கு நிறமாற்றம் போன்ற எந்த விதமான கெடுதல்களும் வராமலும் தடுக்கும். பேஸ் கோட்டிங் உலர்ந்ததும் முதலில் ஒரு கோட்டிங் நெயில் பாலீஷ் கொடுத்து, 2 நிமிடம் கழித்து இரண்டாவது கோட்டிங் கொடுக்க வேண்டும். இது உலர ஒரு 2 நிமிடங்கள் கொடுங்கள். பிறகு Front Coating தர வேண்டும். இந்த Front Coating பாலீஷும் நிறமற்றதாக நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். எல்லா பிரபலமான பிராண்டுகளிலும் இவை அனைத்துமே கிடைக்கும். கடைகளில் கிடைக்காமல் போனாலும், சலோனில் நிச்சயம் கிடைக்கும்.
இப்படி அப்ளை செய்வதன் மூலம் நெயில் பாலீஷ் நீண்ட நாட்கள் இருப்பதோடு, அங்கங்கே உரிந்து போகாமல், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சாதாரண நெயில் பாலீஷ் நிறமும் இந்த முறையில் போடும்போது கைக்கு அழகை தரும். அது தவிர நாமே வீட்டிலேயே French manicure செட் போல செய்து கொள்ளலாம். இதற்கு, நிறமற்ற Base Coat ஒரு முறை அடித்து, பிறகு அதன் மேல் Front Coating அடித்து 2 நிமிடம் உலர விடுங்கள். இப்போது நகம் வளர்ந்திருக்கும் நுனிகளில் மட்டும் வெள்ளை நிறத்தை நக வளைவு மாறாமல் அப்ளை செய்யுங்கள். இது மிகவும் ஸ்டைலிஷான லுக் தரும். வெள்ளை நிறத்துக்கு பதிலாக சில்வர், கோல்ட் என்றும் உபயோகிக்கலாம். உங்கள் நகங்கள் இயற்கையாகவே பளபளப்பாக நகம் மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதுபோல் தெரியும். உடையின் நிறத்துக்கேற்றவாறு நகப்பாலீஷை மாற்ற முடியாதவர்கள், வெஸ்டர்ன் உடைகளை அடிக்கடி அணிபவர்களுக்கு, ஆபீஸ் செல்பவர்களுக்கு அனைவருக்குமே பொருத்தமாக இருக்கும். இது தவிர எப்போதும் சில்வர் கலர் பாலீஷ் கொஞ்சம் க்ளிட்டரியாக இருப்பதை வாங்கி வைத்துக் கொண்டால எப்போது நெயில் பாலீஷ் போட்டாலும், அதன் மேல் இரண்டாவது கோட்டிங்காக சில்வர் கலர் உபயோகித்தால் வித்தியாசமான பெப்பி லுக் கிடைக்கும். ஆனால் இதற்கு மிகவும் லைட்டான சில்வர் கலராக பார்த்து வாங்க வேண்டும். அதில் ஸ்டார் க்ளிட்டர், பெரிய க்ளிட்டர் என்று உள்ளதை வாங்கக்கூடாது.
அடுத்த வாரம் கால்களைப் பராமரிப்பது பற்றி பார்க்கலாம்.

கிட்ஸ் கிரீன்ரைஸ்

 தேவையானவை..
  • பாசுமதி அரிசி – 2 கப்
  • புதினா – ஒரு கட்டு
  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • பச்சை மிளகாய்- 1
  • பூண்டு – ஒரு பல்
  • இஞ்சி –ஒரு சிறு துண்டு
  • பட்டை 1
  • கிராம்பு- 1
  • சோம்பு-1/4 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -2
  • தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
  • கேரட் துருவல் – ¼ கப்
  • உருளைக்கிழங்கு- 1
  • பச்சை பட்டாணி-கால் கப்
  • உப்பு தேவைக்கு
 செய்முறை.
  • முதலில் பாசுமதி அரிசியை 4 கப் நீரில் ஊறவைக்கவும்
  • புதினா ,கொத்தமல்லியை கழுவி காம்பு நீக்கி அதனுடன் சோம்பு,பட்டை,கிராம்பு,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,தேங்காய் ,பச்சை மிளகாயும் சேர்த்து அரைக்கவும்.
  • பின் வாணலியில் நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை போட்டு வதக்கவும்.அதில் கேரட் துருவலையும் வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பச்சை பட்டாணி சேர்க்கவும்.பின் அரிசி ஊறிய நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்

Note:

காரம் குறைவாய்,காய்கள் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு உகந்தது.

பருப்பில்லாத சாம்பார்


தேவையானவை.
  • வெங்காயம் -- 2
  • தக்காளி - 4
  • பச்சைமிளகாய் - 3
  • பூண்டு - 4பல்
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சப்பொடி - அரைடீஸ்பூன்
  • கறி வேப்பிலை - ஒரு ஆர்க்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க
  • எண்ணை - 2ஸ்பூன்
  • கடுகு - 1ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
 செய்முறை.
  • வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.
  • பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.
  • கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள்,பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கள் நன்கு வதங்கியதும்மஞ்சப்பொடிஉப்பு,ஒருகப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து காய்கள்மிருதுவானதும்,கடலை மாவிலொருகப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும்கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Note:

புளி,பருப்பு எதுவும் சேர்க்காத வித்யாசமான சாம்பார் இது.அனைவரும் விரும்புவார்கள்.