சனி, 12 பிப்ரவரி, 2011

வள்ளிகிழங்கு தோசை



தேவையானவை-
  • மரவள்ளி கிழங்கு - 2 கப்
  • அரிசி - 1 கப்
  • சீரகம் - 1 tsp
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  • அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறிய அரிசியுடன் கிழங்கு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • புளிக்க தேவையில்லை உடனே தோசையாக வார்க்கலாம்.
  • தேங்காய் அல்லது வேர்கடலை சட்னியுடன் பரிமாறவும்.

 

சுட்ட கத்தரிக்காய் சட்னி

சனி, 4 டிசம்பர், 2010

சமையல் அரிச்சுவடி-1

ஆரம்பகால சமையல் (For Beginners)
நன்கு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு குறிப்புகளைக் கேட்டோ, பார்த்தோ சமைப்பது பெரிய விஷயமே இல்லை. இப்போதெல்லாம் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் வெளியூர்களில் வேலை பார்க்கும் அவசியம் ஏற்படும் போது, சாப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால், அவர்களே சமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது. அவர்களிடம் உள்ள அத்தியாவசியமான சில பொருட்களையும், பாத்திரங்களையும் கொண்டு என்ன சமைப்பது என்ற சந்தேகம் நிறைய வரும். அவர்களுடைய அடிப்படை சந்தேகங்கங்களை போக்குவதற்கு இந்த பகுதி உதவியாய் இருக்கும்.
சமைக்கும் போது ரொம்ப கவனமாக கைகளை சுட்டுக் கொள்ளாமல் சமைக்க முடிந்தாலே சமையலை ஓரளவு கற்றுக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் பாத்திரங்களையும், கொஞ்சம் பொருட்களையும் வைத்துக் கொண்டே சுவையாக சமைக்க முடியும். காய்கறிகளை நறுக்க சின்ன பலகையும், பதமான நல்ல உறுதியான கத்தியும் போதும். சமைக்க ஆரம்பிக்கும் போது தேவையான எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் தான் புதிதாக சமைப்பவர்களுக்கு தடுமாற்றமில்லாமல் சமைக்க முடியும். சமைக்க நன்றாக பழகியவர்களால் மட்டுமே ஒரே சமயத்தில் 2, 3 வேலைகளை செய்ய முடியும். ஓரளவு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுவுமே தெரியாமல் சமைக்க ஆரம்பித்தவர்களுக்காகவே இந்த தொடர்.
சமைக்கத் தெரியாதவர்களைப் பார்த்து, முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஒரு வெந்நீராவது ஒழுங்கா வைக்கத் தெரியுமா?' ஆனாலும் அதுவும் முக்கியம் தான். வாட்டர் பில்டர் இருந்தால் கவலையில்லை. அது இல்லையென்றால் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அடுப்பில் வைத்தோமா, லேசாக சூடு ஏறியதும் நிறுத்தினோமான்னு இருக்கக் கூடாது. தண்ணீரை வைக்கும் பாத்திரத்தில் வழிய வழிய தண்ணீர் பிடித்து வைக்காமல் ஓரங்குல அளவு குறைவாக வைத்தால் தான் தண்ணீர் கொதிக்கும் போது பாத்திரத்தை விட்டு வெளியே தெறித்து அடுப்பை அணைக்காமலிருக்கும்.
Boiling water
அடுப்பை சீராக வைத்து, தண்ணீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சூடேறி சின்ன சின்ன பப்பிள்ஸ் மறைந்து, பெரிய பப்பிள்ஸ் வந்து தளதளவென்று கொதிக்கும் போது நிறுத்த வேண்டும். மூடி வைக்கும் போது டைட்டாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு மூட வேண்டும். வேர்த்து ஒழுகும் தண்ணீர் வெந்நீருக்குள் சொட்டுவது நல்லதல்ல. இது தான் வெந்நீர் வைக்கும் முறை. இப்படி வைக்கும் வெந்நீரை குடிப்பது தான் நல்லது.
அடுத்ததொரு முக்கியமான விஷயம். பால் காய்ச்சுவது :-)
எப்பொழுதுமே பாலின் அளவை விட கொள்ளளவு அதிகம் பிடிக்கும் பாத்திரத்தில் பால் காய்ச்சினால்தான் சட்டென பொங்கி அடுப்பில் வழிந்து விடாமல் தடுக்க முடியும்.
பால் வாங்கி வந்ததும் பாலை கவரோடு கழுவி விட்டு, ஒரு மூலையில் சின்ன கத்தரிக் கோலால் ஓரங்குல அளவிற்கு நறுக்கி விட்டு, பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். நறுக்கிய மூலையின் எதிர் மூலையை கையால் பிடித்து ஊற்றினால் எல்லா பாலும் பாத்திரத்தில் கொட்டி விடும்.
boiling milk
அடுப்பை மிதமாக வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பொங்கி வரும் போது 2, 3 முறை பாத்திரத்தை கலக்கி வைத்து திரும்ப பொங்க விட வேண்டும். கலக்கி வைப்பது சிரமமாக இருந்தால் கால் தம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பொங்கி வரும் போதெல்லாம், சிறிது சிறிதாக ஊற்றினால் பொங்குவது அடங்கி, திரும்பவும் பால் காய்ந்து பொங்கும். இதுபோல் 2, 3 முறை செய்த பின் அடுப்பை அணைக்கவும்.
வெந்நீர் போட கத்துக்கிட்டாச்சு, பால் காய்ச்ச கத்துக்கிட்டாச்சு. காலையில் எழுந்தவுடனேயோ, ஆஃபீஸிலிருந்து டயர்டாக வந்தாலோ முக்கியமாக தேவைப்படும் ஒன்று டீ (தேநீர்). டீ எப்படி போடுவது என்று தெரிஞ்சுக்கலாமா?
எப்பொழுதுமே டீ போடும் பாத்திரம் தண்ணீர், பால், டீத்தூள் எல்லாம் போட்டு கொதிப்பதற்கு இடம் இருப்பது போல் தாராளமாக இருக்க வேண்டும், கைப்பிடியுள்ள, கெட்டிலானால் டீயை கலக்கும் போதோ, எடுக்கும் போதோ கைப்பிடியை மட்டும் பிடிக்காமல், இன்னொரு கையில் இடுக்கியாலோ, துணியாலோ பிடித்து எடுப்பது நல்லது. எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தாலோ, ஸ்க்ரூ ஏதும் கழண்டிருந்தாலோ மேலே கொட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம். பால் காய்ச்சுவதற்கு, டீ போடுவதற்கு என தனிப் பாத்திரமொன்றை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் புளி கரைப்பதற்கோ, குழம்பு வைப்பதற்கோ பயன்படுத்தினால் பால் திரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். (அப்படி திரிந்து போன பாலையும் கீழே கொட்டாமல் என்ன செய்யலாமென பிறகு பார்க்கலாம்.)
Tea preparation
அரை லிட்டர் பாலில் டீ போடும் முறை
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீ போடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர் பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5 டம்ளர் அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாக இருக்கும்.
தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல் சீவிய இஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால் டீயின் சுவை இன்னும் கூடும்.)
டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாக போட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து, டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.
இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்கு மட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா? சொல்றேனே.
எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே வைத்துக் கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி டீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வர கொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.
ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும் பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும். ஃப்ரிஜ் இல்லாதவர்கள், மீதியுள்ள பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் பால் பாத்திரத்தை (ஆறியதும்) வைத்து மூடி வைத்தால் பால் கெடாமலிருக்கும்.
மாலையில் டீ போடவும், இரவு குடிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலையில் டீ தேவையில்லையெனில் தயிர் போட்டுக் கொள்ளலாம். பால் பாக்கெட்டை வாங்குவதை விட ஸ்கிம்டு மில்க் பவுடரை வாங்கி வைத்து கொண்டால், தேவையான அளவிற்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கொழுப்பும் அதில் குறைவென்பதால் உடல் ஆரோக்கியதிற்கு நல்லது.
தயிர் தயாரிக்கும் முறை
பாலை வெதுவெதுப்பான நிலையில் வைத்து (ரொம்ப சூடாக இருக்கக் கூடாது), ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்கி, மூடி வைக்கவும். பால் தயிராகும் வரை பாத்திரத்தை அசைக்காமலிருப்பது நல்லது.

சமையல் அரிச்சுவடி-2

பாகம் - 2
பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மில்லி தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, பொங்கி வரும் வரை காய்ச்சி இறக்கினால் பால் ரெடி.
டீ போட வேண்டுமென்றால், 3/4 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மிலி தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். லேசாக சூடேறியதும் 1 தேக்கரண்டி டீத்தூள், 2 தேக்கரண்டி (பாலிலேயே கொஞ்சம் இனிப்புத் தன்மை இருக்கும்) சர்க்கரை சேர்த்து டீத்தூள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் டீ குடிப்பதற்கு தயார். இதிலும் தூளாக்கிய ஏலக்காயையும், நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து டீ போடலாம். பால் சூடாகாமல் டீத்தூள், சர்க்கரை சேர்த்தால் சில நேரங்களில் பால் திரிந்து விடும்.
பால் திரிந்தால் என்ன செய்வதுன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேனல்லவா? திரிந்து போன பாலை கொஞ்சம் தயிர் அல்லது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி இன்னும் நன்றாக திரிய வைக்கவும். நன்கு திரிந்ததும் வடிகட்டி, கட்டியாக நிற்கும் பனீரை ஒரு சுத்தமான துணியில் கட்டி, மேலே ஏதாவது வெயிட் வைத்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து கெட்டியான பனீர் கிடைக்கும். இந்தப் பனீரை வைத்து பனீர் மசாலா, பட்டர் மசாலா இன்னும் எவ்வளவோ செய்யலாம். ரசகுல்லா கூட செய்யலாம்!
திரிந்த பாலில் ரசகுல்லா !
கெட்டியான பனீரை கைகளால் நன்கு தேய்த்து உதிர்த்து விட்டு நீள ஷேப்பில் உருட்டி வைத்துக் கொள்ளவும். 1/2 டம்ளர் சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து, கொதிக்க விடவும். தளதளன்னு நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு மேலே மிதந்து வந்தபின் அடுத்தது சேர்க்க வேண்டும். எல்லா உருண்டைகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ரசகுல்லா சாப்பிட தயார் தான். அளவு ரொம்ப கம்மியாக இருக்குன்னு பார்க்கறீங்களா? அரை லிட்டர் பால் திரிந்தால் இவ்வளவு தாங்க வரும். இதுக்காக வேண்டுமென்றே அடுத்த முறை பாலைத் திரிய விடக் கூடாது :-)
ஹை, பார்த்தீங்களா? இப்ப ஒரு இனிப்பும் செய்ய கத்துக் கொண்டாச்சு.
இன்னொரு கொசுறு டிப்ஸ்: வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே வாட்டர் எனப்படுவது. சூப் வைக்க பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு வே வாட்டருடன் சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுப்போக்கு மட்டுப்படும். இந்த வே வாட்டரை 2, 3 நாட்கள் புளிக்க விட்டு, அந்த வே வாட்டரை பாலில் ஊற்றி திரிய வைத்து பனீராக்கி ரசகுல்லா செய்வது தான் பெரிய அளவில் செய்யும் சரியான முறை.
பால் பவுடர் ஸ்கிம்டு மில்க் பவுடராக (SKIMMED MILK POWDER) கொழுப்பு அதிகமில்லாமல் உடம்புக்கு நன்மை பயக்கும்.
காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா? ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது கெடுதலை உண்டாக்கும்.
காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.
1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.
டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.
1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.
இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும் காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள் அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும் காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது. அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.

சமையல் அரிச்சுவடி-4

பாகம் - 4
டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும், உடலுக்கு நன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.
அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபி, கடுங்காப்பி என கிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.
புதினா டீ
Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.
புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
கிரீன் டீ
கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ
சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான் பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.
கொத்தமல்லி காஃபி
ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள் சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.
விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு, பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.
கடுங்காப்பி
Black coffeeகிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!
ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம் சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.
வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம். காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும் தலைவலிக்கு நல்ல மருந்து தான்.

என்ன உணவு கொடுக்கலாம்?

என்ன உணவு கொடுக்கலாம்?
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
Baby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
Baby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.
வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
Baby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.
ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
Baby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பு



பாலூட்டுதல்
baby feeding
இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.
நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.
healthy food
சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்
பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.
பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.
baby
பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். குழந்தையின் மூக்கு பகுதி மார்பில் மிகவும் அழுந்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
குழந்தையை இழுத்துப் பிடித்து மார்பில் அழுத்தி பால் கொடுத்தல்கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும்.
குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.
குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தினை தொடர்ந்து கொடுத்து வரவும். நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் பருகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.
தவிர்க்க இயலாத சில காரணங்களால், சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் இயலாது போய்விடும். தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பார்முலா மில்க் கொடுக்கலாம்.