சனி, 4 டிசம்பர், 2010

சமையல் அரிச்சுவடி-1

ஆரம்பகால சமையல் (For Beginners)
நன்கு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு குறிப்புகளைக் கேட்டோ, பார்த்தோ சமைப்பது பெரிய விஷயமே இல்லை. இப்போதெல்லாம் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் வெளியூர்களில் வேலை பார்க்கும் அவசியம் ஏற்படும் போது, சாப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால், அவர்களே சமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது. அவர்களிடம் உள்ள அத்தியாவசியமான சில பொருட்களையும், பாத்திரங்களையும் கொண்டு என்ன சமைப்பது என்ற சந்தேகம் நிறைய வரும். அவர்களுடைய அடிப்படை சந்தேகங்கங்களை போக்குவதற்கு இந்த பகுதி உதவியாய் இருக்கும்.
சமைக்கும் போது ரொம்ப கவனமாக கைகளை சுட்டுக் கொள்ளாமல் சமைக்க முடிந்தாலே சமையலை ஓரளவு கற்றுக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் பாத்திரங்களையும், கொஞ்சம் பொருட்களையும் வைத்துக் கொண்டே சுவையாக சமைக்க முடியும். காய்கறிகளை நறுக்க சின்ன பலகையும், பதமான நல்ல உறுதியான கத்தியும் போதும். சமைக்க ஆரம்பிக்கும் போது தேவையான எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் தான் புதிதாக சமைப்பவர்களுக்கு தடுமாற்றமில்லாமல் சமைக்க முடியும். சமைக்க நன்றாக பழகியவர்களால் மட்டுமே ஒரே சமயத்தில் 2, 3 வேலைகளை செய்ய முடியும். ஓரளவு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுவுமே தெரியாமல் சமைக்க ஆரம்பித்தவர்களுக்காகவே இந்த தொடர்.
சமைக்கத் தெரியாதவர்களைப் பார்த்து, முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஒரு வெந்நீராவது ஒழுங்கா வைக்கத் தெரியுமா?' ஆனாலும் அதுவும் முக்கியம் தான். வாட்டர் பில்டர் இருந்தால் கவலையில்லை. அது இல்லையென்றால் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அடுப்பில் வைத்தோமா, லேசாக சூடு ஏறியதும் நிறுத்தினோமான்னு இருக்கக் கூடாது. தண்ணீரை வைக்கும் பாத்திரத்தில் வழிய வழிய தண்ணீர் பிடித்து வைக்காமல் ஓரங்குல அளவு குறைவாக வைத்தால் தான் தண்ணீர் கொதிக்கும் போது பாத்திரத்தை விட்டு வெளியே தெறித்து அடுப்பை அணைக்காமலிருக்கும்.
Boiling water
அடுப்பை சீராக வைத்து, தண்ணீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சூடேறி சின்ன சின்ன பப்பிள்ஸ் மறைந்து, பெரிய பப்பிள்ஸ் வந்து தளதளவென்று கொதிக்கும் போது நிறுத்த வேண்டும். மூடி வைக்கும் போது டைட்டாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு மூட வேண்டும். வேர்த்து ஒழுகும் தண்ணீர் வெந்நீருக்குள் சொட்டுவது நல்லதல்ல. இது தான் வெந்நீர் வைக்கும் முறை. இப்படி வைக்கும் வெந்நீரை குடிப்பது தான் நல்லது.
அடுத்ததொரு முக்கியமான விஷயம். பால் காய்ச்சுவது :-)
எப்பொழுதுமே பாலின் அளவை விட கொள்ளளவு அதிகம் பிடிக்கும் பாத்திரத்தில் பால் காய்ச்சினால்தான் சட்டென பொங்கி அடுப்பில் வழிந்து விடாமல் தடுக்க முடியும்.
பால் வாங்கி வந்ததும் பாலை கவரோடு கழுவி விட்டு, ஒரு மூலையில் சின்ன கத்தரிக் கோலால் ஓரங்குல அளவிற்கு நறுக்கி விட்டு, பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். நறுக்கிய மூலையின் எதிர் மூலையை கையால் பிடித்து ஊற்றினால் எல்லா பாலும் பாத்திரத்தில் கொட்டி விடும்.
boiling milk
அடுப்பை மிதமாக வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பொங்கி வரும் போது 2, 3 முறை பாத்திரத்தை கலக்கி வைத்து திரும்ப பொங்க விட வேண்டும். கலக்கி வைப்பது சிரமமாக இருந்தால் கால் தம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பொங்கி வரும் போதெல்லாம், சிறிது சிறிதாக ஊற்றினால் பொங்குவது அடங்கி, திரும்பவும் பால் காய்ந்து பொங்கும். இதுபோல் 2, 3 முறை செய்த பின் அடுப்பை அணைக்கவும்.
வெந்நீர் போட கத்துக்கிட்டாச்சு, பால் காய்ச்ச கத்துக்கிட்டாச்சு. காலையில் எழுந்தவுடனேயோ, ஆஃபீஸிலிருந்து டயர்டாக வந்தாலோ முக்கியமாக தேவைப்படும் ஒன்று டீ (தேநீர்). டீ எப்படி போடுவது என்று தெரிஞ்சுக்கலாமா?
எப்பொழுதுமே டீ போடும் பாத்திரம் தண்ணீர், பால், டீத்தூள் எல்லாம் போட்டு கொதிப்பதற்கு இடம் இருப்பது போல் தாராளமாக இருக்க வேண்டும், கைப்பிடியுள்ள, கெட்டிலானால் டீயை கலக்கும் போதோ, எடுக்கும் போதோ கைப்பிடியை மட்டும் பிடிக்காமல், இன்னொரு கையில் இடுக்கியாலோ, துணியாலோ பிடித்து எடுப்பது நல்லது. எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தாலோ, ஸ்க்ரூ ஏதும் கழண்டிருந்தாலோ மேலே கொட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம். பால் காய்ச்சுவதற்கு, டீ போடுவதற்கு என தனிப் பாத்திரமொன்றை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் புளி கரைப்பதற்கோ, குழம்பு வைப்பதற்கோ பயன்படுத்தினால் பால் திரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். (அப்படி திரிந்து போன பாலையும் கீழே கொட்டாமல் என்ன செய்யலாமென பிறகு பார்க்கலாம்.)
Tea preparation
அரை லிட்டர் பாலில் டீ போடும் முறை
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீ போடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர் பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5 டம்ளர் அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாக இருக்கும்.
தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல் சீவிய இஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால் டீயின் சுவை இன்னும் கூடும்.)
டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாக போட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து, டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.
இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்கு மட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா? சொல்றேனே.
எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே வைத்துக் கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி டீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வர கொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.
ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும் பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும். ஃப்ரிஜ் இல்லாதவர்கள், மீதியுள்ள பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் பால் பாத்திரத்தை (ஆறியதும்) வைத்து மூடி வைத்தால் பால் கெடாமலிருக்கும்.
மாலையில் டீ போடவும், இரவு குடிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலையில் டீ தேவையில்லையெனில் தயிர் போட்டுக் கொள்ளலாம். பால் பாக்கெட்டை வாங்குவதை விட ஸ்கிம்டு மில்க் பவுடரை வாங்கி வைத்து கொண்டால், தேவையான அளவிற்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கொழுப்பும் அதில் குறைவென்பதால் உடல் ஆரோக்கியதிற்கு நல்லது.
தயிர் தயாரிக்கும் முறை
பாலை வெதுவெதுப்பான நிலையில் வைத்து (ரொம்ப சூடாக இருக்கக் கூடாது), ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்கி, மூடி வைக்கவும். பால் தயிராகும் வரை பாத்திரத்தை அசைக்காமலிருப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக